கோல்கட்டா: உள்ளூர் போட்டியில், ‘பீல்டிங்கின்’ போது ஏற்பட்ட காயத்தினால் சிகிச்சை பலனின்றி கோல்கட்டா கிரிக்கெட் வீரர் அன்கித் கேஷ்ரி மரணமடைந்தார்.
பெங்கால் அணியின் (19 வயது) முன்னாள் கேப்டன் அன்கித் கேஷ்ரி, 20, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடந்த உலக கோப்பை (19 வயது) தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியில் இடம் பிடித்தார். சி.கே. நாயுடு தேசிய சாம்பியன்ஷிப் தொடரில், பெங்கால் ‘ஏ’ (23 வயதுக்குட்பட்டோர்) அணிக்காக விளையாடினார்.
கடந்த 17ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலை., மைதானத்தில் பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) சார்பில், கிளப் அணிகளுக்கு இடையிலான உள்ளூர் போட்டி நடந்தது. இப்போட்டியில் ஈஸ்ட் பெங்கால், பவானிபூர் அணிகள் மோதின.
இப்போட்டியில் ஈஸ்ட் பெங்கால் லெவன் அணியில் அன்கித் கேஷ்ரிக்கு இடம் கிடைக்கவில்லை. 12வது வீரராக இருந்த இவர், சகவீரர் அர்னாப் நான்டிக்கு பதிலாக ‘பீல்டிங்’ செய்ய மாற்று வீரராக களமிறங்கினார்.
ஆட்டத்தின் 44வது ஓவரில், பவானிபூர் அணி பேட்ஸ்மேன் துாக்கி அடித்த பந்தை ‘டீப் கவர்’ பகுதியில் நின்ற அன்கித் கேஷ்ரி, பவுலிங் செய்த சவுரப் மண்டல் ‘கேட்ச்’ செய்ய ஓடினர். ஒருகட்டத்தில் இருவரும் மோதிக் கொண்டனர். அப்போது மண்டலின் முழங்கால், கேஷ்ரியின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பலமாக தாக்கியது. இதனால் நிலைதடுமாறி கீழே மயங்கி விழுந்த கேஷ்ரியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ் போல, உடனடியாக ‘கோமா’ நிலைக்கு சென்றார்.
இதனை பார்த்த பேட்ஸ்மேன் அனுஸ்துப் மஜும்தார், பீல்டிங் செய்து கொண்டிருந்த ஈஸ்ட் பெங்கால் அணியின் ஷிவ்சாகர் சிங், அன்கித் கேஷ்ரியை காப்பாற்ற ஓடினர். அப்போது மூச்சுவிடமுடியாமல் தவித்த கேஷ்ரிக்கு, ஷிவ்சாகர் வாய்வழியாக சுவாச காற்றை செலுத்தி காப்பாற்றினார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அன்கித் கேஷ்ரி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அன்கித் கேஷ்ரி உடல் நிலையில் நேற்று மாலை லேசான முன்னேற்றம் ஏற்பட்டது. இதனிடையே, திடீரென இன்று அதிகாலை மாரடைப்பால் மரணடைந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டியில், ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் பிலிப் ஹியுஸ் சிகிச்சை பலனின்றி மரணடைந்தார். தற்போது கோல்கட்டா வீரர் அன்கித் கேஷ்ரி, போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால் மரணடைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Sign up here with your email

ConversionConversion EmoticonEmoticon